கிருஷ்ணகிரி
விளையாட்டு மைதானத்தில் முதியவரின் உடலை புதைத்ததற்கு கிராமமக்கள் எதிர்ப்பு
|தேன்கனிக்கோட்டை அருகே முதியவரின் உடலை விளையாட்டு மைதானத்தில் புதைத்ததற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தினர் குழி மீது படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
விளையாட்டு மைதானத்தில் அடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தண்டரை ஊராட்சிக்கு உட்பட்ட அடவிசாமிபுரம் கிராமத்தில் மலை புறம்போக்கு நிலத்தில் தமிழக அரசு சார்பில் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் எடுத்து சென்று விளையாட்டு மைதானத்தில் அடக்கம் செய்ய முயன்றனர். இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை துணை தாசில்தார் ஆனந்த், வருவாய் அலுவலர் ஸ்ரீதர், கிராம நிர்வாக அதிகாரி தனபால், தளி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோதண்டன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், நீலமேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது திடீரென முதியவரின் உடலை அங்கு தோண்டப்பட்ட குழியில் போட்டு அதிகாரிகள் முன்னிலையில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
கிராமமக்கள் எதிர்ப்பு
இதையடுத்து கிராமமக்கள் அங்கு சென்று விளையாட்டு மைதானத்தில் முதியவரின் உடலை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், விளையாட்டு மைதானத்தின் அருகே கோவில் உள்ளது. இதனால் அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதியவரின் குடும்பத்தினர், உறவினர்கள் புதைத்த உடலை வெளியே எடுக்க விடாமல் குழி மீது படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.