செங்கல்பட்டு
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
|நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு பகுதியில் குப்பை
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே உள்ள பாலாஜி அவென்யு, ஜெயராம் நகர் செல்லும் கூட்டுசாலை சந்திப்பு அருகே குடியிருப்பு மத்தியில் கொட்டப்படுகிறது.
இதன் காரணமாக குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு, வாந்தி மயக்கம் தோல் அரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
குறிப்பாக குழந்தைகளுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுகிறது. மேலும் வீடுகளில் உள்ள உணவு பொருட்களில் அதிக அளவு ஈக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அமரருவதால் நல்ல உணவுகளை கூட சாப்பிட முடியாமல் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் குடியிருப்பு மத்தியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை திடீரென கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்துவிட்டு தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் நகர மன்ற தலைவர், துணைத்தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு நகர மன்ற துணைத் தலைவர் வக்கீல் லோகநாதன், மறியலில் ஈடுபட்டு் கொண்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக்கோரி நாங்கள் பலமுறை நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்த போது நகராட்சி ஆணையாளர் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வருகிறார். மேலும் சாலை மறியல் செய்வதற்கு முன்பு கூட நகராட்சி ஆணையாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்போது அவர் சரியான பதிலை எங்களுக்கு தெரிவிக்கவில்லை, இதனால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு நகர மன்ற துணைத்தலைவர் உங்கள் கோரிக்கைகள் அதிகாரிகளிடம் பேசி நிரந்தர தீர்வு காண்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.