திருவள்ளூர்
திருவாலங்காடு அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
|திருவாலங்காடு அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள தொழுதாவூர் அரசு நடுநிலை பள்ளிக்கு எதிரே குட்டை அருகே உள்ள இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாயார், உள்பட 7 பேர் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியதாக தெரிகிறது. அதனை அகற்ற வேண்டும் என அதே கிராமத்தை சேர்ந்த ரேணுகா என்பவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வருவாய்துறையினருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 5-ந் தேதி திருத்தணி ஆர்.டி.ஓ. அசரத்பேகம் தலைமையில் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 கட்டிடங்களை இடித்து அகற்றினர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்திற்கு அருகில் உள்ள குட்டை புறம்போக்கு ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்து அகற்ற திட்டமிட்டுள்ளதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் பரவியது. இதனையடுத்து குட்டை ஆக்கிரமிப்பில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வருவாய்த்துறையினரை கண்டித்து சின்னம்மாபேட்டை நான்கு வழி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு் விக்னேஷ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாசில்தார் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் வெண்ணிலா மறியலில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்ததாவது:
ஐகோர்ட்டு உத்தரவு படி சர்வே எண் 109-ல் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மட்டுமே அகற்றப்பட்டது. வருவாய் துறையினர் சர்வே எண் 111-ல் உள்ள இடத்தை நிலஅளவீடு செய்ய போவதாக தவறான தகவல் மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பட்டா வழங்குவது குறித்து ஆர்.டி.ஓ.விடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.