சென்னை
திருவொற்றியூர் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் வாயு கசிவால் பொதுமக்கள் பாதிப்பு
|திருவொற்றியூர் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் வாயு கசிவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக நவீன கருவி மூலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவொற்றியூர், மணலி, எண்ணூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு அதிக அளவில் காற்றில் கலந்து வருகிறது.
இதனால் திருவொற்றியூர், மணலி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கடந்த 20 நாட்களாக திருவொற்றியூர், எண்ணூர், மணலி சுற்று வட்டார பகுதிகளில் 'சல்பர்-டை-ஆக்சைடு' வாயு காற்றில் பரவி வருகிறது. சிலிண்டர் வாயு போன்ற வாசனை உணரப்படுவதால் பெண்கள் பீதியில் உறைந்து உள்ளனர். அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் பலர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருவொற்றியூரில் முகாமிட்டு 5 இடங்களில் "தெர்மோ பாசினல் சாம்பிலர்" என்ற நவீன கருவியை பொருத்தி காற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாசு கலப்பு உள்ளதா? என கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஓரிடத்தில் 8 மணி நேர கண்காணிப்புக்கு பிறகு சேகரிக்கப்படும் மாதிரிகள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வு கூடங்களில் சமர்பித்து 4 நாட்களில் முடிவு பெறப்பட்டு காற்றில் மாசு கலப்பு உள்ளதா? என்று கண்டறியப்படும் என அதிகாரிகள் கூறினர்.
அதன்படி நேற்று திருவொற்றியூர் கலைஞர் நகரில் 4 இடங்களில் காலடிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பெரியார் நகரில் செயல்படும் தனியார் பள்ளி கட்டிடம் என உயரமான கட்டிடங்களில் அந்த நவீன கருவியை பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.
இந்தநிலையில் சுமார் 20 நாட்களாக பொதுமக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படும் மர்ம வாயு கசிவை கட்டுப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே வாயு கசிவை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காணாவிட்டால் மத்திய அரசு தொழிற்சாலைக்கு எதிராக பாதிக்கப்பட்ட பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு தெரிவித்தார்.