சிவகங்கை
ஒக்கூர் முகாம் வாழ் தமிழர்களுக்கு ரூ.4.51 கோடியில் குடியிருப்புகள்
|ஒக்கூர் முகாம் வாழ் தமிழர்களுக்கு ரூ.4.51 கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் முகாம் வாழ் தமிழர்களுக்கு ரூ. 4.51 கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். முன்னதாக ஒப்பந்ததாரரான சி.கே.ஆர். நிறுவனத்தின் இயக்குனர் நெடுமரம் எம்.ஆர்.சி. இளங்கோவன் வரவேற்றார்.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், முதல்-அமைச்சர் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருந்து வருகிறது. ஒக்கூரில் புதிதாக ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் முகாம் வாழ் தமிழர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பகுதிகளிலும் 372 வீடுகள் கட்டித்தரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று பேசினார்.
இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், சாந்தா சகாயராணி, காரைக்குடி நாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பவானிகணேசன், மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், ஒன்றிய சேர்மன் மஞ்சுளா பாலச்சந்திரன், மாவட்ட மாணவரணி ராஜ்குமார், சோமசுந்தரம், செயற்பொறியாளர் சிவராணி, ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் பூமாஅருணாச்சலம், திட்ட இயக்குனர் சிவராமன், வட்டாட்சியர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதசுந்தரம், ரெத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.