< Back
மாநில செய்திகள்
மூன்றாம் பாலினத்தவருக்கு அனைத்து பிரிவுகளிலும் இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

மூன்றாம் பாலினத்தவருக்கு அனைத்து பிரிவுகளிலும் இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
9 Jan 2024 11:36 PM IST

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

சென்னை,

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கிரேஸ் பானு கணேசன். மூன்றாம் பாலினத்தவரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.அதன்படி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ''மூன்றாம் பாலினத்தவர்களை தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் அரசு சேர்த்துள்ளது. இதனால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேந்த மூன்றாம் பாலினத்வர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகை கிடைப்பது இல்லை. அதேநேரம், இதுவரை ஒரு மூன்றாம் பாலினத்தவர் கூட இட ஒதுக்கீடு சலுகையை பெறவில்லை. கர்நாடகா மாநிலத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி., எஸ்.டி. என அனைத்து பிரிவிலும் ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது'' என்று வாதிட்டார்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இதுகுறித்து அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்