நாமக்கல்
வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
|திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது.
எலச்சிபாளையம்
ஆய்வுக்கூட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி அளவில் நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் குறித்து, காலதாமதத்திற்கான காரணம், பணிகளின் தற்போதைய நிலை, பணி முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:-
பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு மின்விளக்கு வசதி, பள்ளி சுற்றுச்சுவர் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஊராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தொடங்கி விரைந்து முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். ஊராட்சிகளில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், பணி முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
விரைந்து முடிக்க வேண்டும்
கூட்டத்தின் வாயிலாக திட்ட பணிகளில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் தொடர்ந்து கள ஆய்வு செய்து பணிகளை கண்காணிக்க வேண்டும். நிர்வாக அனுமதி வழங்கி பணிகளை தொடங்காத ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள வீடுகள், குடிநீர் தொட்டிகள், குடிநீர் இணைப்புகள், நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் உள்ளிட்ட விவரங்களை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையிலும், பொதுமக்களிடம் நன்மதிப்பு கிடைக்கப்பெறும் வகையிலும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.