< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்    அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா அறிவுரை
விழுப்புரம்
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா அறிவுரை

தினத்தந்தி
|
19 Nov 2022 12:15 AM IST

வளர்ச்சி திட்டப்பணிகள் தரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா அறிவுரை கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை இந்தியா ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், சமத்துபுரத்தில் புனரமைக்கப்பட்ட பணிகள் விவரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இதுவரை வழங்கப்பட்டுள்ள பட்டா இனங்களின் வகைகள், பெறப்பட்ட மனுக்கள், நிலுவை மனுக்கள், தீர்வு காணப்படாத மனுக்கள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'இல்லம் தேடி கல்வி", 'எண்ணும் எழுத்தும் இயக்கம்", பள்ளி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கீழ் 'நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், 'புதுமைப்பெண்" திட்டத்தின்கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்ட விவரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா கேட்டறிந்தார்.

அறிவுரை

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை சென்றடைவது அரசு அலுவலர்களின் பணியாகும். எனவே இவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்துவது உங்களின் தலையாய கடமையாகும். அரசு அலுவலர்கள் அனைவரும் தங்கள் கீழ் பணிபுரியும் பணியாளர்களை உத்வேகப்படுத்தியும், ஊக்கமளித்தும் பணிகளை முடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதார தேவைக்காக தேவைப்படும் கோரிக்கைகளை மனுவாக வழங்கும்போது அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளும் தரமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்துகொள்வதுடன், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்