கிருஷ்ணகிரி
ராணுவ ஆள் சேர்ப்பு முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம்
|கிருஷ்ணகிரியில் ராணுவ ஆள் சேர்ப்பு முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது
கிருஷ்ணகிரி
அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டிற்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்குபெற உள்ளனர்.இந்த முகாம் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். கோவை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கர்னல் அன்சல்வர்மா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வந்தனா கார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், தாசில்தார் இளங்கோ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போலீசார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பள்ளிக்கல்வித்துறை, வட்டார போக்குவரத்து துறை, அரசு போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், தீயணைப்பு துறை, நகராட்சித்துறை, விளையாட்டுத்துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.