< Back
மாநில செய்திகள்
நச்சு கலந்திருப்பதாக ஆய்வில் கண்டுபிடிப்பு: வீராணம் ஏரியை தூய்மைப்படுத்தவேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

நச்சு கலந்திருப்பதாக ஆய்வில் கண்டுபிடிப்பு: வீராணம் ஏரியை தூய்மைப்படுத்தவேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
9 Jan 2024 2:10 PM IST

தமிழ்நாட்டில் மாசுபடாத நீர்நிலைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து ஆறுகள், ஏரி, குளங்கள் என எல்லா நீர்நிலைகளும் மாசுபட்டிருக்கின்றன.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் 16 கி.மீ நீளமுள்ள வீராணம் ஏரி நீரின் தூய்மைத்தன்மை குறித்து அறிவதற்காக சென்னை பல்கலைக்கழகமும், மாநிலக் கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வில் நீலப்பச்சைப் பாசி எனும் பாக்டீரியா அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இரு வகையான நீலப்பச்சைப் பாசிகள் வீராணம் ஏரியில் காணப் படுவதாகவும், அவை இரண்டும் இரு வகையான நச்சுகளை உருவாக்குவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. நீலப்பச்சைப் பாசி அனைத்து வகையான நீர்நிலைகளிலும் காணப்படும். ஆனால், ஒரு கட்டத்தைத் தாண்டும் போது அது சுற்றுச்சூழலுக்கும், நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் கடுமையான தீங்கை ஏற்படுத்தும். மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய நீரில், ஒரு லிட்டருக்கு ஒரு மைக்ரோகிராம் அளவுக்கு நீலப்பச்சைப் பாசி நச்சுகள் இருக்கலாம்.

நீலப்பச்சைப் பாசி நச்சு கலந்த நீரை பயன்படுத்துவோருக்கு அரிப்பு போன்ற தோல் நோய்கள், கல்லீரல் நோய்கள், தசையூட்டமற்ற ஒரு பக்க மரப்பு நோய், பார்க்கின்சன் நோய், அல்சைமர் நோய் போன்ற நம்பியல் நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீரில் வளரும் மீன்களை உண்போருக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகள், வயல்களில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் உரக்கழிவுகள் ஆகியவை கலந்ததால் தான் வீராணம் ஏரியில் நீலப்பச்சைப் பாசி எனப்படும் பாக்டீரியா உருவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களின் அளவு வீராணம் ஏரியில் அதிகரித்ததற்கு காரணம் போதிய பராமரிப்பின்மை தான். கர்நாடகத்தில் உருவாகும் காவிரி நீர் தான் வீராணம் ஏரிக்கு வருகிறது. கர்நாடகத்தில் கலக்கும் சாக்கடைக் கழிவுகள், மேட்டூரில் சேரும் வேதிப்பொருள் கழிவுகள், நொய்யலில் சங்கமமாகும் சாயப்பட்டறை கழிவுகள், காவிரி பாசன மாவட்டங்களில் இணையும் உரக்கழிவுகள் ஆகியவை தான் வீராணம் ஏரி நீரின் சீரழிவுக்கு காரணம் ஆகும்.

இவற்றைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை தான். ஆனால், அக்கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதன் விளைவைத் தான் வீராணம் ஏரி நீரை பயன்படுத்துபவர்கள் அனுபவித்து வருகின்றனர். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் மாசுபடாத நீர்நிலைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து ஆறுகள், ஏரி, குளங்கள் என எல்லா நீர்நிலைகளும் மாசுபட்டிருக்கின்றன.

ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூய்மைப்படுத்த வேண்டியதன் தேவையை அரசு ஒப்புக்கொண்டிருக்கும் போதிலும், நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அதற்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. வீராணம் ஏரி பாசன ஆதாரமாக மட்டுமின்றி, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்வதால், அதில் கலந்துள்ள நச்சுகளை அழிக்க வேண்டியது முதன்மைக் கடமையாகும்.

அதற்காக காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான நடந்தாய் வாழி காவேரி என்ற பெயரிலான திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். வீராணம் ஏரியின் ஓரத்தில் கோரைப்புற்களை வளர்த்தால் நீலப்பச்சைப் பாசி அழிந்து விடும் என்பதால் கோரைப்புல் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்