திசையன்விளை: அதிசய கிணற்றில் சென்னை ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வு
|திசையன்விளை அருகே உள்ள அதிசய கிணற்றை சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் பார்வையிட்டனர்.
திசையன்விளை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் படுகை அருகில் சுமார் 50 அடி ஆழம் உள்ள கிணறு உள்ளது. மழைகாலத்தில் படுகையில் இருந்து கிணற்றுக்குள் ஆயிரக்கணக்கான கனஅடி நீர் பல மாதங்களாக சென்றும் கிணறு நிறம்பவில்லை. இந்த அதிசய கிணறு வழியாக செல்லும் நீர் எங்கு செல்கிறது என்பது பற்றி ஆய்வு சென்னை ஐ.ஐ.டி.புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமணன் தலைமையிலான குழுவிலை வந்து அதிசய கிணற்றையும் அருகில் உள்ள கிணறுகளின் நீரின் தன்மை பற்றியும் நவின கருவி மூலம் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பித்தனர்
இந்நிலையில் இன்று காலை சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர்கள் குழுவினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் கேமிரா மற்றும் கோபுரா (பாம்பு) கேமிரா மூலம் ஆய்வு செய்து அதை கணிணி மூலம் விளக்கினர்.
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது,
இந்த பகுதியில் கால மழை சரியாக பெய்யாததால் கடல்நீர் உள்வாங்கியுள்ளது. அதை தடுக்கும் தொடக்க பணிதான் இந்த ஆய்வு. இந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டு கடல்நீர் உள்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த அரசு கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர் வெங்கடரமணன் கூறியதாவது,
இந்த அதிசய கிணறு உள்ள பகுதிகளில் 300 கிணறுகளுக்கு மேல் நவீன கருவிகள் மூலம் அறிவியல்பூர்வமாக ஆராட்சி செய்யப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 50 கி.மீட்டர் சுற்றளவிற்கு சுண்ணாம்பு பாறைகள் உள்ளது. பாதாள நீர் ஓடைகள் உள்ளதால் இதுவரை அதிசய கிணறு நிறம்பவில்லை. இந்த ஆண்டு சென்ற நீரால் 6 கி.மி.தூரம் வரை கிணறுகளில் நீர்மட்டம் நிறம்பியுள்ளது. பாதாள நீர் ஓடைகள் இந்த பகுதியில் இருப்பது அதிசயம். இது சிறிய அளவிலான ஆய்வுதான் கருமேனியாறு நீர்வழிபாதை அருகில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், முதுமொத்தன்மொழி பஞ்சாயத்து தலைவர் க.ஆனந்தகுமார் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.