கிருஷ்ணகிரி
ரூ.76.40 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
|பர்கூர் ஒன்றியத்தில் ரூ.76.40 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
பர்கூர்
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளர் ஆணையர் (நிலச்சீர்த்திருத்தம்) டாக்டர் பீலா ராஜேஷ், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியுடன் இணைந்து, பர்கூர் ஊராட்சி ஒன்றியம் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி ஊராட்சி இந்திரா நகரில் ரூ.70 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பர்கூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். வருவாய் துறை மூலம் வழங்கப்படும் பட்டா, சிட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய மின்னணு குடும்ப அட்டை, சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணியாளர்களின் விபரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட அரசு நிதியுதவி பெரும் பள்ளியான கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான சத்துணவு கூடம் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாக முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின் போது, பர்கூர் தாசில்தார் பன்னீர்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, வெங்கடராம கணேஷ், பொறியாளர் செல்வம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.