நாமக்கல்
வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
|பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பரமத்திவேலூர்
ஆய்வு
பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெல்லம் தயாரிக்க பல்வேறு வகையான ரசாயனம் ஆலைகளில் ஆய்வு நடத்த நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிங்காரவேல், மனோகரன், கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் பிலிக்கல்பாளையம் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வெல்லம் பறிமுதல்
ஆய்வின்போது வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 மூட்டை அஸ்காவை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அஸ்கா மற்றும் ரசாயனம் கலந்த 1,050 கிலோ வெல்லத்தையும் பறிமுதல் செய்தனர். 4 வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெல்லம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏல மார்க்கெட்டில் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் கலந்துகொண்டு போசும்போது, வெல்லம் தயாரிக்கும் போது கலப்படத்தை தவிர்க்க வேண்டும். அஸ்கா மற்றும் ரசாயனம் கொண்டு வெல்லம் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெல்லம் தயாரிக்கும் பணியில் அடுப்பு எரிக்கும்போது துணி மற்றும் டயர்களை பயன்படுத்தக் கூடாது. அனைத்து ஆலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். வெல்லம் தயாரிக்கும் ஊழியர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.