< Back
மாநில செய்திகள்
தென் மாவட்டங்களில் 6 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் - தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு
மாநில செய்திகள்

'தென் மாவட்டங்களில் 6 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள்' - தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு

தினத்தந்தி
|
19 Dec 2023 10:33 AM IST

கடந்த 2 நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய கனமழை தற்போது ஓய்ந்துள்ளது.

திருநெல்வேலி,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. கனமழை ஓய்ந்தபோதும் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அதேவேளை, மழை ஓய்ந்துள்ளதால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் படிப்படியாக வடியத்தொடங்கியுள்ளது. இதையடுத்து, மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 6 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெறுவதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 6 விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 550 வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்ததும் நிலைமை சீராகும். ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அடைந்துள்ளனர். ரெயில் நிலையத்தில் இருந்து கர்ப்பிணி உட்பட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

மீட்பு பணிக்காக ராமநாதபுரத்தில் இருந்து 50 படகுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்கின்றன. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற சென்னையில் இருந்து 100 மோட்டார் பம்புகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகும்' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்