கோத்தகிரி அருகே 20 அடி ஆழ குழிக்குள் விழுந்த இளைஞர் பத்திரமாக மீட்பு
|நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 20 அடி ஆழ குழிக்குள் விழுந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கரிக்கையூர் அருகே உள்ள பங்களாபாடிகை பழங்குடியின கிராமத்தில் வெள்ளை என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீடு நீண்ட காலமாக பயன்பாடற்ற நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த வீட்டின் மையப் பகுதியில் இருந்த 20 அடி ஆழ குழிக்குள் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து வெளியே வர இயலாமல் உயிருக்கு போராடி வருவதாக கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழி மிக குறுகியதாக இருந்ததால் உள்ளே இறங்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்பதால் தீயணைப்பு வீரர் ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியுடன் குழிக்குள் இறங்கினார். தொடர்ந்து பக்கவாட்டு மண் சரிந்து கொண்டிருந்ததாலும், இரவு நேரமாக இருந்ததாலும், மழை பெய்ததாலும் மீட்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.
இருப்பினும் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குழியில் விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டு, சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பயன்பாடற்று கிடந்த வீட்டில் புதையல் ஏதேனும் உள்ளதா என்று பார்க்க யாரேனும் குழி தோண்டி இருக்க கூடும் என நினைத்து எட்டிப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்ற இளைஞர் குழிக்குள் தவறி விழுந்தது தெரியவந்துள்ளது.