தேனி
கிணற்றில் விழுந்த மான் மீட்பு
|கடமலைக்குண்டு அருகே கிணற்றில் விழுந்த மான் மீட்கப்பட்டது.
கடமலைக்குண்டு அருகே உள்ள கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யனார்கோவில் மலைப்பகுதியில் புள்ளிமான்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மான்கள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை மலைப்பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி அருகில் இருந்த தோட்டத்திற்கு சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள சுமார் 30 அடி ஆழ கிணற்றில் மான் தவறி விழுந்தது. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள், உடனடியாக கண்டமனூர் வனச்சரக அலுவலகம் மற்றும் கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய மானை கயிறு வலை மூலம் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மானுக்கு கால்நடை டாக்டர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, வனப் பகுதியில் விடப்பட்டது.