ஈரோட்டில் ரூ.33 கோடி மதிப்பிலான சாமி சிலை மீட்பு - 600 ஆண்டுகள் பழமையானது என தகவல்
|கடத்தப்பட்ட சிலை கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள கோவிலைச் சேர்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பழனிசாமி என்பவர், சுவாமி வெங்கடாஜபதி சிலையை 33 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், சிலையை வாங்க வருவது போல் நடித்து பழனிசாமியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு 22 கிலோ 800 கிராம் எடை கொண்ட சுவாமி பாலாஜி சிலை இருப்பது தெரிய வந்தது. அந்த சிலை சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த சிலையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலை கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள கோவிலில் இருந்து, அந்த கோவிலின் அர்ச்சகர் மூலமாக தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட சிலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. பாலமுருகன் தெரிவித்துள்ளார்.