< Back
மாநில செய்திகள்
திருநின்றவூர் அருகே சாலையோர பள்ளத்தில் டிரைவர் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருநின்றவூர் அருகே சாலையோர பள்ளத்தில் டிரைவர் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
30 Sept 2023 1:21 PM IST

திருநின்றவூர் அருகே சாலையோர பள்ளத்தில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி அடுத்த திருநின்றவூர் ராஜாங்குப்பம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 35). டிப்பர் லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று இரவு சத்யா, தலையில் பலத்த காயங்களுடன் ராஜாங்குப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சாலையோரம் உள்ள சுமார் 3 அடி பள்ளத்தில் கீழே விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதாசிவம், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சம்பவ இடத்தில் சாலை ஓரத்தில் சத்யா வந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து கிடந்தது. சத்யாவின் தலையில் மட்டும் காயம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து திருநின்றவூர் போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக சத்யா தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டாரா? அல்லது மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து தலையில் அடிபட்டு சத்யா இறந்தாரா? என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்