< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
3 Oct 2023 6:29 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது பெரியபுலியூர் கிராமம். இங்கு வசித்து வந்தவர் கட்டிட தொழிலாளி வினோத்குமார் (வயது42). இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் வினோத் குமாரை பிரிந்த மனைவி சரண்யா தனது மகளுடன் தாய் வீடான கீழ்முதலம்பேடு கிராமத்தில் கடந்த சில வருடங்களாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மாயமான கட்டிட தொழிலாளி வினோத் குமாரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில், நேற்று காலை அதே பகுதியில் உள்ள பெரிய ஏரியில் வினோத் குமார், பிணமாக மிதந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வினோத் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வினோத் குமாரும், அவருடன் ஏற்கனவே வேலை செய்து வந்த வடமாநில நபர் ஒருவரும் நேற்று முன்தினம் மேற்கண்ட ஏரி அருகே பேசிக்கொண்டிருந்ததாகவும், இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த வடமாநில நபர் வெளியூர் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து வினோத் குமாரின் தந்தை வஜ்ரமணி (65) பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் வேலை செய்த வந்த வடமாநில நபரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்