சென்னை
திருமுல்லைவாயல் அருகே 8 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தை மீட்பு - பெண் கைது
|திருமுல்லைவாயல் அருகே 8 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார், இது தொடர்பாக பெண்ணை கைது செய்தனர்.
திருமுல்லைவாயல் எட்டியம்மன் நகர் காமராஜ் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 34). இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (29). 29.11.2014 அன்று தமிழ்ச்செல்வி வீட்டுக்கு வந்த பெண் ஒருவர், அவருடைய ஒரு வயது ஆண் குழந்தையை கடத்திச்சென்று விட்டார். இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்ைதயை கடத்தி சென்ற பெண்ணை தேடி வந்தனர்.
விசாரணையில் அந்த பெண், புழல் மேட்டுப்பாளையம் மதுரா லிங்கம் 6-வது தெருவை சேர்ந்த தேவி (43) என்பதும், சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த போது 2017-ம் ஆண்டு பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறில் அவர்களது 2 வயது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதும், அப்போது தன்னிடம் இருந்த குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டு சிறைக்கு சென்றதும், 6 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரிந்தது.
அவருடைய கணவர் சுரேஷ், மனைவி கொடுத்த ஆண் குழந்தையை போலீசில் ஒப்படைத்ததும், அந்த குழந்தை தற்போது தாம்பரம் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து வருவதும் தெரிந்தது.
இதையடுத்து திருமுல்லைவாயல் போலீசார் ஜான் ஜெபராஜ் - தமிழ்ச்செல்வியை தாம்பரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச்சென்று அவர்களின் குழந்தையை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு மகன் உயிருடன் மீட்கப்பட்டதால் கணவன்-மனைவி இருவரும் கண்ணீர் விட்டு அழுதனர். குழந்தையை கடத்திய தேவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.