திண்டுக்கல்
கொடைரோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு
|கொடைரோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்கப்பட்டார்.
கொடைரோடு அருகே உள்ள சி.புதூரை சேர்ந்தவர் விஜயன் (வயது 47). இவரது மனைவி ராணி (38). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். விஜயனும், அவரது மனைவியும் அம்மையநாயக்கனூரில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். இதனால் சூளை அருகில் குடும்பத்துடன் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை ராணி செங்கல் சூளை அருகே உள்ள தோட்டத்து பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்தார். 50 ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. மாறாக சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் அதில் சிக்கிய ராணி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயகுரல் எழுப்பினார்.
இதனை கேட்ட விஜயன் மற்றும் அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து பார்த்தனர். உடனே இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி ராணியை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் கிணற்றுக்குள் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.