காஞ்சிபுரம்
பூட்டிய வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
|காஞ்சீபுரத்தில் பூட்டிய வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்டப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் திருமேற்றலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 57). மேட்டு தெரு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த புதன்கிழமை இவரது மனைவி மற்றும் மூன்று மகள்கள் உத்திரமேரூரை அடுத்த எலப்பாக்கத்திற்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் வீடுக்கு வந்து பார்த்தபோது ராமலிங்கம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உரைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிதைந்த நிலையில் துர்நாற்றம் வீசியபடி இருந்த ராமலிங்கம் உடலை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ராமலிங்கம் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.