< Back
மாநில செய்திகள்
ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு... பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
மாநில செய்திகள்

ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு... பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

தினத்தந்தி
|
19 Dec 2023 12:41 PM IST

3 நாட்களாக ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது.

தூத்துக்குடி,

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி கடந்த 14-ந்தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, கடந்த 2 தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது.

4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருப்பதால் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு 'செந்தூர் எக்ஸ்பிரஸ்' ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் கனமழை காரணமாக தண்டவாளம் தெரியாததால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பயணிகள் ரெயிலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சியால் நேற்று அதிகாலை வரை நடந்த மீட்பு பணியில், சுமார் 300 பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் 4 பஸ்கள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து கனமழை பெய்த வண்ணம் இருந்ததாலும், ரெயில் நிலையத்தை தண்ணீர் கடுமையாக சூழ்ந்ததாலும் எஞ்சிய 500 பயணிகளை மீட்க முடியாத நிலை உருவானது.

தொடர்ந்து 3 நாட்களாக ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது. முதலில் கர்ப்பிணி பெண், ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 பேரை விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டு மதுரைக்கு அழைத்து சென்றனர்.

இந்த மீட்புப்பணி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் நெகிழ்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒன்றரை வயது குழந்தையை வீரர் ஒருவர் மீட்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரெயில் நிலையத்தில் சிக்கி உள்ள மற்ற பயணிகள் இன்று மாலைக்குள் மீட்கப்பட்டு வாஞ்சி மணியாச்சியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்