தென்காசி
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு
|பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்கப்பட்டான்.
பனவடலிசத்திரம்:
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே குருக்கள்பட்டியை அடுத்த கோ.மருதப்பபுரம் கீழ தெருைவச் சேர்ந்தவர் ஆனந்த். கூலி தொழிலாளி. இவருடைய மகன் அர்ஜூன் (வயது 13), அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துள்ளான். இவன் கோடை விடுமுறைக்காக குருக்கள்பட்டியில் உள்ள தனது தாத்தா முருகப்பன் வீட்டுக்கு சென்றான்.
இந்த நிலையில் நேற்று அர்ஜூன் தனது தாத்தாவுடன் சேர்ந்து ஆடு மேய்க்க சென்றான். பின்னர் அவன், அங்குள்ள தோட்டத்தில் தண்ணீர் குடிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் உள்ள கிணற்றில் அர்ஜூன் தவறி விழுந்தான். சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த அவன் மோட்டார் குழாயை பிடித்து கொண்டு கூச்சலிட்டான்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகப்பன், இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி அர்ஜூனை பத்திரமாக மீட்டனர்.