சென்னையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 55 பழங்கால கற்சிலைகள் மீட்பு - டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
|வீட்டின் சுற்றுப்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை,
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுப்புறத்திலும், மொட்டை மாடியிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 பழங்கால கற்சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர். இது குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னையில் உள்ள சிலை தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலில் சிலர் சந்தேகத்திற்கிடமாக பழங்கால கற்சிலைகளை இடம் மாற்றம் செய்ய தயார் செய்வதாகவும் மேலும் அச்சிலைகள் இந்து கோவில்களில் இருந்து திருடப்பட்டவைகளாக இருக்கலாம் என்று கிடைத்த தகவலின் பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
வீட்டின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் மொட்டை மாடியிலும் 55 பழங்கால கற்சிலைகள் இதில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அரியலூர் மாவட்டம் செந்துறை பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோவிலுக்கு சொந்தமான வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உலோக சிலைகள் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டிருந்தது.
இதில் ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தை அங்குள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்துடன் தொல்லியல்துறை நிபுணர்களின் உதவியோடு ஒப்பீடு செய்து பார்த்தபோது இரண்டு புகைப்படங்களிலும் உள்ள ஆஞ்சநேயர் உலோக சிலையும் ஒன்று தான் என்பது உறுதியானது. இதையடுத்து அந்த சிலையும் மீட்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.