காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட 2 குழந்தைகள் மீட்பு
|காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட 2 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. 2-வது பிரசவத்திற்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மூர்த்தியின் முதல் குழந்தை சக்திவேல் (வயது 3) தனது தாயை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை தனது மனைவி குள்ளம்மாள், மகள் சவுந்தர்யா (6) மற்றும் மூர்த்தியின் மகன் சக்திவேல் ஆகியோருடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில கடந்த 8-ந்தேதி இரவு 8 மணியளவில் குழந்தைகள் சக்திவேல், சவுந்தர்யா ஆகியோரை காணவில்லை.
போலீசார் விசாரணை
இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்பேரில் காணாமல் போன 2 குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்க காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.
விசாரணையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காணாமல் போன குழந்தைகளை அழைத்து செல்வதை போல் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடைபெற்ற தீவிர விசாரணையில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் காஞ்சீபுரம் நகரத்தில் உளள பல்வேறு தெருக்கள், சந்துகள் வழியாக வாலாஜாபாத் தாலுகா அஞ்சூர் கிராமத்திற்கு அழைத்து சென்றது கண்டறியப்பட்டது.
குழந்தைகள் மீட்பு
இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் துரிதமாக அஞ்சூர் கிராமத்திற்கு சென்று அங்கு ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.
குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன்(60) கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் தப்பியோடிய லட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.