விருதுநகர்
அ.முக்குளம் பகுதியில் இ-சேவை மையம் தொடங்க கோரிக்கை
|200 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அ.முக்குளம் பகுதியில் இ-சேவை மையம் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி,
200 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அ.முக்குளம் பகுதியில் இ-சேவை மையம் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதார் சேவை மையம்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் அதனை சுற்றி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கருவக்குடி, கட்டனூர், ஆலாத்தூர், புல்வாய்க்கரை, தச்சனேந்தல், எழுவனி, கல்விமடை, வி.கரிசல்குளம், அழகாபுரி, சிறுவனூர், எழுவணி, ரெட்டகுளம், திம்மாபுரம், மனக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் ஆதார் அட்டை பெறுதல், ஆதார் திருத்தம், மற்றும் பள்ளிக்கு செல்ல சான்றிதழ் போன்ற பணிகளுக்கு திருச்சுழி தாலுகா அலுவலகம் செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது.
அங்கேயும் ஒரு சில நேரங்களில் இ-சேவை குறைபாடு ஏற்படுவதால் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தொடங்க நடவடிக்கை
இதனால் தினமும் நீண்ட தூரம் அலைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- நரிக்குடி சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்வதாக இருந்தாலோ, புதிய ஆதார் அட்டை பெற வேண்டும் என்றாலோ திருச்சுழி அல்லது விருதுநகருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணம் மற்றும் கால விரயம் ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் இணைய தளம் கோளாறு காரணமாக பணி முழுவதுமாக முடியாமல் வீணாக திரும்ப வரவேண்டிய நிலை உள்ளது.
ஆதலால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அ.முக்குளம் பகுதியை மையமாக கொண்டு இ-சேவை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தொடங்குவதன் மூலம் எண்ணற்ற கிராம மக்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.