< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் நிலையங்களை அமைக்க கோரிக்கை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் நிலையங்களை அமைக்க கோரிக்கை

தினத்தந்தி
|
16 Oct 2022 1:05 AM IST

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக குற்றச்சம்பவங்கள்

தமிழகத்திலேயே சிறிய மாவட்டமான பெரம்பலூரில் அதிக குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதோடு, தற்போது அதிக திருட்டு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. மேலும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்களை உடனடியாக பிடிக்க முடியாததற்கு காரணம் போலீஸ் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது.

ெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், பாடாலூர், குன்னம், அரும்பாவூர், மருவத்தூர், வி.களத்தூர், கை.களத்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு போலீஸ் நிலையமும், பெரம்பலூரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஒன்றும், நகர போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரும் பணியில் உள்ளனர்.

கூடுதல் போலீஸ் நிலையங்கள்

ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் அதிகமாக குற்றச்சம்பவங்கள் நடப்பதால், அங்கு நிலுவையில் உள்ள வழக்குகளை போலீசாரால் சரியாக விசாரிக்க முடியவில்லை. இதனால் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் நிலையங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளையத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே உள்ளது.

இதனால் பெரம்பலூர் போலீஸ் நிலைய போலீசாருக்கு அதிக வேலைப்பளு உள்ளது. அம்மாபாளையத்தில் போலீஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை வலுத்துள்ளது.

வழக்குகளை விரைந்து முடிப்பதில்...

இதுகுறித்து பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனியை சேர்ந்த பார்த்த சாரதி கூறுகையில், பெரம்பலூரில் தினமும் ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டம் ஏதாவது இருந்து கொண்டே இருப்பதால், அங்கு பாதுகாப்பு பணிக்கு போலீசார் அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. அந்த வழக்குகளையும் பெரம்பலூர் போலீசார் தான் விசாரிக்கின்றனர். இதனால் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதிலும், திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதிலும் தொய்வு ஏற்படுகிறது.

எனவே நகர போக்குவரத்து போலீசாரை விபத்து வழக்குகளை கையாள உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டால், பெரம்பலூர் போலீசார் திருட்டு வழக்குகளில் அதிகம் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது, என்றார்.

பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்

ஆலத்தூர் தாலுகா, கூத்தனூரை சேர்ந்த பிரம்ம தேவா கூறுகையில், அருகே உள்ள அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 18 போலீஸ் நிலையங்கள் உள்ளன. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் வெறும் 9 போலீஸ் நிலையங்கள் தான் உள்ளன. எனவே மாவட்டத்தில் கூடுதலாக அம்மாபாளையம், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய பகுதிகளில் போலீஸ் நிலையங்களை அமைக்கவும், செட்டிகுளம் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள போலீஸ் நிலையங்களில் நிலவும் போலீஸ் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை போலீசாரால் சமாளிக்க முடியும். திருட்டு சம்பவங்களை தடுக்க முடியும், என்றார்.

மேலும் செய்திகள்