தேனி
மதுபான பாரை அகற்ற கோரி அங்கப்பிரதட்சணம் செய்து மனு கொடுத்த சிவசேனா கட்சியினர்
|மதுபான பாரை அகற்ற கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து சிவசேனா கட்சியினர் மனு கொடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநில செயலாளர் உள்பட நிர்வாகிகள் 3 பேர் திடீரென தரையில் படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
சிறிது தூரம் அங்கப்பிரதட்சணம் செய்தபடி வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மதுபான பாரை மூடக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மனு கொடுக்க வந்துள்ளோம் என்றனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் ஒரு மனு கொடுத்தனர் அதில், பழனிசெட்டிபட்டியில் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மதுபான பாரை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. எனவே இந்த மதுபான பாரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர்.