திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவில் சார்பில் நடத்தப்பட்ட கருணை இல்லத்தை மீண்டும் திறக்க கோரிக்கை
|திருத்தணி முருகன் கோவில் சார்பில் நடத்தப்பட்ட கருணை இல்லத்தை மீண்டும் திறக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி மேட்டு தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு ஆகிய இடங்களில் கருணை இல்லம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இங்கு தாய், தந்தை இல்லாத 5 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு படிப்பதற்கு தேவையான உபகரணங்கள், தங்குமிடம், உணவு, உடை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த கருணை இல்லத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனாதை குழந்தைகள் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் உரிய சான்றிதழ் பெற்று வந்து கோவில் நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்து கருணை இல்லத்தில் சேர்ந்து பயின்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்றால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த 2 கருணை இல்லங்களில் படித்த 14 சிறுவர்களை அவர்களின் உறவினர்களிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைத்தது. தமிழக அரசு ஊரடங்கு விலக்கிக் கொண்ட நிலையில் கருணை இல்லங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.