பழனி-சென்னை இடையே கூடுதல் ரெயில் இயக்க மத்திய மந்திரியிடம் கோரிக்கை - அமைச்சர் சக்கரபாணி தகவல்
|பழனி-சென்னை இடையே கூடுதல் ரெயில் இயக்க மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்ததாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
டெல்லியில் நேற்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, செயலர் டி.ஜகந்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மத்திய மந்திரி பியூஷ் கோயலை அமைச்சர் சக்கரபாணி சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கான நிலுவை மானியம் மற்றும் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களின் அளவை உயர்த்தி வழங்குதல் குறித்து சக்கரபாணி மனு அளித்தார்.
மேலும் இந்த சந்திப்பின் போது பழனி-சென்னை இடையே கூடுதல் ரெயில் இயக்க மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்ததாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பழனியில் இருந்து திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், விருத்தாச்சலம் வழியாக சென்னைக்கு கூடுதலாக ஒரு ரெயில் இயக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைத்தோம்.
அப்போது அவர் பழனியில் இருந்து ஈரோட்டுக்கு புதிய ரெயில் திட்டம் கொண்டு வர நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த மாதம் அவர் தமிழகத்திற்கு வர இருப்பதாகவும், இங்குள்ள அதிகாரிகளிடம் இது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்" என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.