< Back
மாநில செய்திகள்
கீழ்பவானி வாய்க்காலில் 55 கிலோ மீட்டருக்கு சீரமைப்பு பணிகள் செய்ய விவசாயிகள் கோரிக்கை
ஈரோடு
மாநில செய்திகள்

கீழ்பவானி வாய்க்காலில் 55 கிலோ மீட்டருக்கு சீரமைப்பு பணிகள் செய்ய விவசாயிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
20 May 2022 2:47 AM IST

கீழ்பவானி வாய்க்காலில் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு:

கீழ்பவானி வாய்க்காலில் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் பாசன தேவையை பூர்த்தி செய்யும் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புக்காக தமிழக அரசு நபார்டு வங்கி கடன் உதவியுடன் ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதற்கான பணியை தொடங்க, விவசாயிகளில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கீழ்பவானி வாய்க்கால் பிரச்சினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் விவசாயிகள் மத்தியில் சுமுக நிலை மற்றும் ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் வகையில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தீவிர நடவடிக்கை எடுத்தார். அவர் கீழ்பவானி சீரமைப்பு எதிர்ப்பு தரப்பு விவசாயிகளிடம் பல முறை பேச்சுவார்த்தைகள் மற்றும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தினார். அதே நேரம் வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வரும் தரப்பு விவசாயிகளிடம் அமைச்சர் கருத்து கேட்கவில்லை என்ற புகார் எழுந்தது.

கருத்துக்கேட்பு கூட்டம்

இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. அமைச்சர் சு.முத்துசாமி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்துக்கு கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு ஆதரவு தரப்பு விவசாயிகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் அமைச்சரிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது எதிர்பாராத வகையில் எதிர்ப்பு தரப்பு விவசாயிகள் சிலர் கைகளில் கோரிக்கை அட்டையுடன் கூட்ட அரங்குக்குள் நுழைந்தனர். அவர்கள் தங்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சு.முத்துசாமி, உங்கள் தரப்பில் 4 முறைகளுக்கு மேல் பேசி விட்டேன். உங்கள் கருத்துகளையும் கேட்டு இருக்கிறேன். ஆதரவு தரப்பினரின் கருத்துகளை கேட்பதற்காக மட்டும்தான் இந்த கூட்டம் நடக்கிறது என்றார்.

எதிர்ப்பு கோஷம்

மேலும், எதிர்ப்பு தரப்பினர் கூட்டத்தில் அமர்ந்து கருத்துகளை கேட்பதாக இருந்தால் உள்ளே இருக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால், எதிர்ப்பு தரப்பினர் கைகளில் கொண்டு வந்த எல்.பி.பி. கான்கிரீட் வேண்டாம் என்ற கோரிக்கை அட்டைகளை கைளில் ஏந்தியபடி இருந்தனர். எனவே அமைச்சர் சு.முத்துசாமி, அவர்களை அமைதியாக இருக்க கோரி எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே ஆதரவு தரப்பு விவசாயிகளும் எதிர்ப்பு தரப்பினரை நோக்கி தங்கள் கருத்துகளை கூறும் நிலை ஏற்பட்டதால், நிலைமையை சமாளிக்கும் வகையில், எதிர்ப்பு தரப்பு விவசாயிகளை கூட்ட அரங்கை விட்டு வெளியே செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த விவசாயிகள் கோரிக்கை அட்டைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

55 கிலோ மீட்டர்

இதற்கிடையே ஆதரவு தரப்பில் பேசிய விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

கீழ்பவானி வாய்க்காலில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா, அனுப்பி உள்ள கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதை அப்படியே நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறோம். கீழ்பவானி பிரதான வாய்க்காலின் நீளம் சுமார் 200 கிலோ மீட்டர் தூரமாகும். 2 கரைகளையும் சேர்த்து 400 கிலோ மீட்டராக உள்ளது. இதில் 55 கிலோ மீட்டர், அதாவது மொத்த தூரத்தில் 13 சதவீதம் அளவுக்கு மட்டுமே தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். குறைந்தபட்சம் தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ள 13 சதவீதம் அதாவது 55 கிலோ மீட்டர் தொலைவினையாவது உடனடியாக சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும்.

ஏன் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்றால், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த பிரச்சினையை அணுக வேண்டியது உள்ளது. தற்போது சுமார் 1 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு வழங்கப்படும் தண்ணீர் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கடைமடை பகுதிகளுக்கு முறையாக பாசனம் கிடைப்பது இல்லை. அதே நேரம் கடைமடை விவசாயிகளுக்காக பிற பாசன சபையினர் தங்கள் பகுதிக்கு பாய வேண்டிய தண்ணீரை தியாகம் செய்து, சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் கொடுக்கிறார்கள். இது விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் உதவும் வகையில் செய்யப்படுகிறது. ஆனால், வருங்காலத்தில் இந்த பரஸ்பர பகிர்வு தொடருமா என்பது சந்தேகமே.

நவீனப்படுத்துதல் அவசியம்

அதுமட்டுமின்றி தாராபுரம் பாசனத்தில் கைவிடப்பட்ட நிலங்கள் மீண்டும் கீழ்பவானி பாசன திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதற்கான தண்ணீரை சரி செய்யும் வகையில் வீட்டுமனைகளாக்கப்பட்டு, நகர்மயமான பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகத்தை தடுக்கலாம் என்ற கருத்து உள்ளது. அப்படியே செய்தாலும், தற்போது விவசாயிகளின் பரஸ்பர உதவியால் பாசனம் பெறும் கடைமடை நிலம் 20 ஆயிரம் ஏக்கர், தாராபுரம் பாசனத்தில் சேர்க்கப்பட உள்ள 25 ஆயிரம் ஏக்கர் என 45 ஆயிரம் ஏக்கருக்கு கூடுதல் தண்ணீர் வேண்டும்.

இதில் நகர்மயமான நிலங்கள் சுமார் 15 ஆயிரம் ஏக்கருக்கான தண்ணீர் வழங்கலாம் என்றாலும், மேலும் 30 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவேதான் வாய்க்காலை நவீனப்படுத்துவது அவசியம் என்று அறிவியல் பூர்வமாக எங்கள் கோரிக்கையை வைக்கிறோம். வருங்காலத்தில் தண்ணீர் குறைவாக வரும்போது அறிவியல் ரீதியாக பாசன நிலத்துக்கு தண்ணீர் வழங்குவதா? அல்லது பழைய பாசன முறையான கவலை இறைத்து தண்ணீர் பாசனம் செய்வதா? என்பதை முடிவுசெய்ய வேண்டும். கீழ்பவானி பாசனம் என்பது முழுமையாக விவசாயத்துக்கானது. குடிநீர் செறிவூட்டும் திட்டம் இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

விவசாயிகள் தரப்பில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.சி.ரத்தினசாமி, ஆதரவு விவசாயிகள் தரப்பு கி.வே.பொன்னையன், ஈஸ்வரமூர்த்தி, அறச்சலூர் செல்வம், எஸ்.பெரியசாமி மற்றும் பாசன சபைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்