கள்ளக்குறிச்சி
விவசாயம் செய்து வரும் நிலத்துக்கு பட்டா வழங்க கோரிக்கை
|கள்ளக்குறிச்சி வன அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மனு விவசாயம் செய்து வரும் நிலத்துக்கு பட்டா வழங்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி
கல்வராயன்மலையில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கல்வராயன் மலையில் ஆண்டாண்டு காலமாக திணை, வரகு, சாமை, சோளம், கம்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிணறுவெட்டி மரவள்ளி, கரும்பு, நெல், மக்காச்சோளம், கம்பு, தக்காளி போன்ற காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலானோர் மழைநீர் மற்றும் ஆறு, ஓடை வாய்க்கால் பாசனத்தையே நம்பி பயிர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்வராயன் மலையில் பெரும்பாலான பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். இதையடுத்து கல்வராயன்மலையில் விவசாயம் செய்து வரும் மலைவாழ்மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தாங்கள் பயிர் செய்து வரும் நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வன அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.