< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா; கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா; கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை

தினத்தந்தி
|
27 Jan 2023 9:35 AM GMT

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசு தின விழா

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நேற்று குடியரசு தினவிழா நடந்தது. குடியரசு தினவிழாவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மூவர்ண பலூனையும், வெள்ளை புறாக்களையும் பறக்கவிட்டார்.

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 26 போலீஸ் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்களும், சிறப்பாக பணிபுரிந்த 117 காவல் துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

அரசு துறை சார்பில், 112 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 3 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில் முன்னாள் படைவீரர் அலுவலகம் மூலம் 4 நபர்களுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியம் மற்றும் கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக, 3 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் பட்டுச்சோலை வியாபாரம், மளிகைக்கடை, காகிதக்கூழ் பொம்மை உற்பத்தி மேற்கொள்ள உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

நற்சான்றிதழ்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, போக்குவரத்து துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 335 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் 25 ஆண்டுகள் பணி முடித்தமைக்கான 4 நபர்களுக்கும் நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பகலவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரைய்யா, வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, ஆன்மீக பிரமுகர் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராமசந்திரபிரபு மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகள்