< Back
மாநில செய்திகள்
உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி மும்முரம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி மும்முரம்

தினத்தந்தி
|
5 Oct 2023 2:00 AM IST

பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

பி.ஏ.பி. கால்வாய்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 4 மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் கடந்த 20-ந்தேதி முதல் பி.ஏ.பி. பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது.

உடைப்பு

இதற்கிடையில் நேற்று முன்தினம் அதிகாலை பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியில் கால்வாயின் 26.200-வது கிலோ மீட்டர் தூரத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது. இதுகுறித்து தகவல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். பின்னர் அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இன்று தண்ணீர் திறப்பு

பி.ஏ.பி. பிரதான கால்வாய் 129 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த கால்வாயில் 26.200-வது கிலோ மீட்டரில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் 2 மில்லின் கன அடி நீர் வீணாகி உள்ளது. இதை தொடர்ந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு, கால்வாயில் பொக்லைன் எந்திரம் மூலம் கரையை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் கம்பி கட்டி கான்கீரிட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பணிகளை முழுமையாக முடித்து இன்று (வியாழக்கிழமை) அணையில் இருந்து கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் கால்வாய் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்