< Back
மாநில செய்திகள்
கோ.மாவிடந்தலில் மின்மாற்றி பழுது: 50 ஹெக்டேர் கரும்பு, நெற்பயிர்கள் கருகும் அபாயம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
கடலூர்
மாநில செய்திகள்

கோ.மாவிடந்தலில் மின்மாற்றி பழுது: 50 ஹெக்டேர் கரும்பு, நெற்பயிர்கள் கருகும் அபாயம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
4 Oct 2023 12:15 AM IST

கோ.மாவிடந்தல் கிராமத்தில் மின்மாற்றி பழுதடைந்துள்ளதால் 50 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்மாபுரம்,

விருத்தாசலத்தை அடுத்த கோ.மாவிடந்தல் கிராமத்தில் விவசாயம் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் பயன்பாட்டுக்காக அப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்கள் பலவீனமடைந்து அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து அதன் உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரிகிறது.

இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலை உள்ளது. ஆனால் தற்போது மின் மாற்றியின் இரு பக்கவாட்டுகளில் செல்லும் மின் கம்பிகள், பக்கவாட்டு தாங்கு கம்பியின் உதவியால் கீழே சாயாமல் நின்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பயிர்கள் கருகும் அபாயம்

இந்நிலையில் நல்ல நிலையில் இயங்கி வந்த இந்த மின்மாற்றி கடந்த வாரம் திடீரென பழுதடைந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு மின் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின் மோட்டார்களை இயக்க முடியாததால் விளைநிலங்களில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கருகும்அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்த மின்மாற்றியை அகற்றி விட்டு புதிய மின்மாற்றி அமைத்து மின்சார வசதியை ஏற்படுத்தி வாடும் பயிர்களை காப்பாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனே அகற்ற வேண்டும்

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, மின்கம்பங்கள் பலவீனமடைந்து இருந்தாலும் அதில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சார வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மின் மாற்றியும் பழுதடைந்து விட்டதால் மின்சாரம் இன்றி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் வெயிலில் கருகும் அபாய நிலை உள்ளது. மேலும் பலத்த காற்று வீசினால் பலவீனமடைந்த நிலையில் உள்ள மின்மாற்றி கீழே சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பலவீனமடைந்த மின்கம்பங்களுடன் கூடிய மின்மாற்றியை உடனடியாக அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நட்டு மின்மாற்றியை சீரமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்