< Back
மாநில செய்திகள்
ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி பழுது
மாநில செய்திகள்

ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி பழுது

தினத்தந்தி
|
29 April 2024 9:31 AM IST

ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது.

ஈரோடு,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 1,688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கடந்த 19-ந் தேதி ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டு சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டன. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சித்தோடு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. 220க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ள நிலையில் ஸ்ட்ராங் ரூமுக்கு வெளியே வைக்கப்பட்ட கேமரா பழுதானது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை கேமராக்கள் இயங்கவில்லை என கூறப்படுகிறது.

ஐ.பி. (IP) முகவரியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கேமரா பாதிக்கப்பட்டதாகவும் பழுது ஏற்பட்ட கேமரா உடனே சரி செய்யப்பட்டதாகவும் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா பழுதடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்