< Back
மாநில செய்திகள்
வாடகை பாத்திரக்கடை உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வாடகை பாத்திரக்கடை உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை

தினத்தந்தி
|
27 May 2022 5:13 PM GMT

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாடகை பாத்திரக்கடை உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சி

வாக்குவாதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு காலனி பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள கொங்கராபாளையம் கிராமத்தில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று புதுஉச்சிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமு(30) என்பவர் நாராயணசாமி கடையின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கத்தியால் குத்திக்கொலை

பின்னர் நாராயணசாமி இரவு 9 மணிக்கு மேல் கடையை மூடிவிட்டு புதுஉச்சிமேட்டில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ராமு உள்பட 5 பேர் நாராயணசாமியிடம் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் நாராயணசாமியின் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த நாராயணசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

இதை அறிந்த நாராயணசாமியின் உறவினர்கள் அன்று இரவு புதுஉச்சிமேடு பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்து வந்த வரஞ்சரம் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் நாராயணசாமியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முயன்றனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, நாராயணசாமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், நாராயணசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், இவரது மனைவி பரமேஸ்வரி, மகன் ராமு மற்றும் உறவினர் ஜெய்சங்கர் மகன்கள் அஜித்குமார், அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.



மேலும் செய்திகள்