< Back
மாநில செய்திகள்
6 ஆண்டுகளாக வாடகை பாக்கி... செல்போன் கோபுரத்தை பிரித்து எடைக்கு போட்ட வீட்டு உரிமையாளர்கள்
சென்னை
மாநில செய்திகள்

6 ஆண்டுகளாக வாடகை பாக்கி... செல்போன் கோபுரத்தை பிரித்து எடைக்கு போட்ட வீட்டு உரிமையாளர்கள்

தினத்தந்தி
|
17 March 2023 1:29 PM IST

6 ஆண்டுகளாக வாடகை தராததால் செல்போன் கோபுரத்தை பிரித்து இரும்பு கடையில் விற்ற வீட்டு உரிமையாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு வடக்கு மாட வீதியை சேர்ந்தவர்கள் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன். இவர்களுக்கு சொந்தமான வீட்டின் மாடியில் தனியார் சிம் கார்டு நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாதம் ரூ.40 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த சிம் கார்டு நிறுவனம் மூடப்பட்டது. இதனால் அந்த செல்போன் கோபுரம் செயல்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் அந்த சிம் கார்டு நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இவர்களது வீட்டின் மாடியில் வைக்கப்பட்டு இருந்த செல்போன் கோபுரத்தை பார்வையிட சென்றார். ஆனால் அங்கு செல்போன் கோபுரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த சிம்கார்டு நிறுவனம் மூடப்பட்டதால் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் செயல்படாமல் இருந்த செல்போன் கோபுரம் துருப்பிடித்து கீழே விழும் நிலையில் இருந்ததாகவும் தெரிகிறது.

இதனால் வீட்டின் உரிமையாளர்கள் அந்த செல்போன் கோபுரத்தை பிரித்து அவற்றை பழைய இரும்பு கடையில் போட்டு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிம்கார்டு நிறுவன மேலாளர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்களுக்கு தரவேண்டிய வாடகை பாக்கியை கொடுத்துவிட்டால் செல்போன் கோபுரத்தை ஒப்படைத்து விடுவதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த செல்போன் கோபுரத்தின் மொத்த விலையே ரூ.8½ லட்சம்தான். அதைவிட வீட்டின் உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய வாடகை பாக்கி அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

இதனால் இந்த வழக்கை எப்படி விசாரணை செய்து முடிப்பது? என்பது தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்