அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள்: நாளை நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்திட மாற்று ஏற்பாடு
|அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு இடையே அமைந்துள்ள பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாளை பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்திட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, 03.02.2024 அன்று நடைபெறவுள்ள பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு, பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு இடையே அமைந்துள்ள பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இடத்தில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திடுமாறு, அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.