விருதுநகர்
புதுப்பிக்கும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும்
|அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் என நகரசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் என நகரசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
நகரசபை கூட்டம்
அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ரவீந்திரன், நகர் நல அலுவலர் ராஜநந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் முன்னிலையில், நகர் மன்ற உறுப்பினர்கள் ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஆணையர் அசோக்குமார் பேசுகையில்:- இன்று 8-வது வார்டில் நகரசபை பதிவு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற உள்ளதால் நகர மன்ற உறுப்பினர்கள் அந்தப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கூட்டத்தில் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
தனி தனியாக கூட்டம்
பொறியாளர் ரவீந்திரன் கூறுகையில், அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது. மேலும் புதிதாக பொருத்தப்படும் தெருவிளக்குகள் அனைத்தும் எல்.இ.டி. விளக்குகளாக பொருத்தப்படும். மேலும் நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று விரிவாக்க பகுதிகளில் தெரு விளக்குகள் பொருத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
துணைத்தலைவர் பழனிச்சாமி:- நகர் மன்ற உறுப்பினர்கள், பொறியாளர் பிரிவில் கொடுக்கப்படும் கோரிக்கைகள் தீர்வு காணப்படுவதில்லை என கோரிக்கை வைத்துள்ளனர். அதனை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் சுகாதாரப்பிரிவுக்கும், பொறியாளர் பிரிவுக்கும் தனி தனியாக கூட்டம் அமைத்து உங்களது கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என்றார்.