< Back
மாநில செய்திகள்
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி தொடக்கம் - ரெயில்வே அதிகாரிகள் தகவல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி தொடக்கம் - ரெயில்வே அதிகாரிகள் தகவல்

தினத்தந்தி
|
22 Oct 2023 5:14 PM IST

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களை மேம்படுத்தவும், உலகத் தரத்தில் வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ், தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அரக்கோணம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி, கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, மாம்பலம், பூங்கா நிலையம், பெரம்பூர், பரங்கிமலை, சூலூர்பேட்டை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய 15 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. ரெயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் விதமாகவும், முகப்புப்பகுதியை மேம்படுத்துவது, உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதன் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது.

கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை ரெயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை தெற்கு ரெயில்வே தொடங்கியுள்ளது. நடைமேடைகள் மறுசீரமைத்தல், அழகுபடுத்துதல், விரிவாக்கம் செய்தல், பார்க்கிங் வசதி, வை-பை வசதி, கண்காணிப்பு கேமரா என பல்வேறு வசதிகள் இதில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

கும்மிடிப்பூண்டி, சென்னை சென்டிரல்-கூடூர் இடையில் உள்ள ஒரு தொழில்துறை மையமாகும். இந்த ரெயில் நிலையத்தை சராசரியாக நாள் தோறும் 17 ஆயிரத்து 125 பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் நாள்தோறும் சராசரியாக ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் வருவாய் கிடைக்கிறது. எனவே, இந்த நிலையத்தின் 2 பக்கமும் ஆயிரத்து 10 மீட்டர் பரப்பளவில் புதிய நிலைய கட்டிடம் வர உள்ளது. 16 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 3 இடங்களில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. நடைமேடையை இணைக்கும் வகையில் அகலமான நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையத்தை மறுசீரமைக்க ரூ.37 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்