திண்டுக்கல்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் புனரமைப்பு பணி விரைவில் தொடக்கம்
|திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் விரைவில் புனரமைப்பு பணி தொடங்க இருக்கிறது. அதில் பழைய குட்ஷெட்டுக்கு அலுவலகங்கள் மாற்றப்பட உள்ளன.
ரெயில் நிலையங்கள் புனரமைப்பு
இந்தியாவில் மிகப்பெரிய பொது போக்குவரத்து அமைப்பாக ரெயில்வே இருக்கிறது. நாடு முழுவதும் அனைத்து நகரங்களையும் இணைத்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் முக்கிய நகரங்களை இணைக்க ரெயில் பாதை அமைத்தல், இரட்டை ரெயில் பாதை அமைத்தல், தேஜஸ் மற்றும் வந்தேபாரத் போன்ற புதிய ரெயில்களை இயக்குதல் என ரெயில்வே திட்டம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
இதற்கிடையே மிகவும் பழமையான ரெயில் நிலையங்களை புனரமைக்கும் பணியை ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ரெயில்களின் சேவை, பயணிகளின் வருகை, சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, ரெயில்வே நிர்வாகத்துக்கு கிடைக்கும் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் ரெயில் நிலையங்கள் புனரமைக்கப்படுகின்றன.
திண்டுக்கல் ரெயில் நிலையம்
அந்த வகையில் மதுரை கோட்டத்தில் நெல்லை ரெயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லை பொறுத்தவரை 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன.
இந்த ரெயில்கள் நின்று செல்வதற்கு வசதியாக 5 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றன. ரெயில் பயணிகளின் வசதிக்காக 5 நடைமேடைகளை இணைக்கும் நடைமேம்பாலம், சுரங்கப்பாதை, 3 லிப்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும் பேட்டரி கார்கள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
பழைய குட்ஷெட்டில் அலுவலகங்கள்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 2 மற்றும் 3-வது நடைமேடைகளின் நடுவே நிர்வாக அலுவலங்கள் இருக்கின்றன. ரெயில்வே மேலாளர் அலுவலகம், ரெயில்வே போலீஸ் நிலையம், பயணிகள் ஓய்வறை, நிலைய அதிகாரி, மின்பொறியாளர் உள்ளிட்ட அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த கட்டிடங்கள் அனைத்தும் மிகவும் பழமையானவை ஆகும்.
இதற்கிடையே முதலாவது நடைமேடை அருகே பழைய குட்ஷெட் பகுதி உள்ளது. இந்த பழைய குட்ஷெட் பகுதியில் ரெயில்வே நிர்வாக அலுவலகங்கள் மாற்றப்பட இருக்கின்றன. இதற்கான கட்டிடங்கள் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட இருக்கிறது.
அதற்கு முன்பாக ஐ.ஆர்.சி.டி.சி.மூலம் நவீன உணவகம் கட்டப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதையடுத்து டீ மற்றும் தின்பண்டங்கள் கடை, நவீன கழிப்பறை கட்டப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து புனரமைப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.