< Back
மாநில செய்திகள்
வாலாஜாபாத் அருகே ரூ.25 லட்சத்தில் குளம் சீரமைப்பு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

வாலாஜாபாத் அருகே ரூ.25 லட்சத்தில் குளம் சீரமைப்பு

தினத்தந்தி
|
27 April 2023 12:55 PM IST

வாலாஜாபாத் அருகே ரூ.25 லட்சத்தில் குளம் சீரமைக்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தோண்டாங்குளம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் குளம் பல ஆண்டு காலத்துக்கு முன்பு வரை இருந்தது. இந்த குளம் பராமரிப்பின்றி சமதளமாக காலி நிலம் போல மாறிப்போனது. இந்த கோவில் குளத்தை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நிர்வாகம், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்திடம் குளம் வெட்டுவதற்கான அனுமதியை பெற்றார். இதைத்தொடர்ந்து ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பாஷ் என்ற தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை அணுகி சிவன் கோவில் குளத்தை வெட்டி சீரமைத்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்ற தொழிற்சாலை நிர்வாகம் குளம் வெட்டி தர தனது சமுதாய மேம்பாடு நிதியில் ரூ.25 லட்சத்தை ஒதுக்கீடு செய்து வழங்கியது. இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவில் குளத்தை மீண்டும் வெட்டி, நீர் வரத்து கால்வாய் ஏற்படுத்தி, குளத்தை சுற்றி வர கிராம மக்கள் தங்களின் சொந்த நிலத்தை தானமாக வழங்கி பாதை அமைத்து மரக்கன்றுகளை நட்டு குளத்தை மீட்டெடுத்தனர். இந்த குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பாஷ் தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோவிந்தராஜன், முன்னாள் தலைவர் எல்லப்பன், வார்டு உறுப்பினர்கள் சூரியகாந்தி, பூபதி, சாந்தி, ஞானவேல், கற்பகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்