புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி
|புதுக்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரசு அருங்காட்சியகம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது தமிழகத்திலே 2-வது பெரிய அருங்காட்சியகமாக திகழ்கிறது. கடந்த 1910-ம் ஆண்டு முதலே இந்த அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான அருங்காட்சியகம் ஆகும். இதனை தமிழக அரசின் தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது.
அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கனிமங்கள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகை பொருட்கள், கூத்து கலைப்பொருட்கள், பனையோலைகள், அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப்படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மாந்த உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் உள்ளிட்டவை உள்ளன. மொத்தம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் உள்ளன.
புனரமைப்பு பணி
இந்த நிலையில் அருங்காட்சியகத்தை ரூ.4 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது உள்ள பழமையான கட்டிடத்தில் அதன் தொன்மை மற்றும் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிலைகள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டன. மேலும் பல அரும்பொருட்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.
தற்போது பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வகையிலான பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு பின் அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பின் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அரியவகை பொருட்களை பொதுமக்கள் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி நிறைவடைவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். புதுப்பிக்கும் பணியை விரைந்து முடித்து அரும்பொருட்கள் அனைத்தையும் பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருங்காட்சியகத்திற்கு தனியாக காப்பாட்சியர் நியமிக்க வேண்டும், பொருட்கள் பற்றி விளக்கி எடுத்துரைக்க அலுவலக உதவியாளர்கள் நியமிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அலுவலக தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
அதிகாரி விளக்கம்
அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி குறித்து காப்பாட்சியர் (பொறுப்பு) பக்கிரிசாமி கூறுகையில், புனரமைப்பின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.