கடலூர்
ரூ.72 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு
|கடலூரில் ரூ.72 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை நேற்று திறக்கப்பட்டது. புதிதாக மாலை நேர சந்தையும் தொடங்கப்பட்டுள்ளது
கடலூர்
உழவர் சந்தை
கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடலூரில் கடந்த 9.8.2000 அன்று உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இங்கு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளை பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர். மேலும் தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்களும் வந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை குறைந்து விலைக்கு வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் நவீன மயமாக்கப்படும் என கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. அந்த வகையில் கடலூர் உழவர் சந்தையை புதுப்பிக்க ரூ.72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து உழவர் சந்தையில் செயல்பட்ட கடைகள் அனைத்தும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மஞ்சக்குப்பத்தில் உள்ள மைதானத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
திறப்பு விழா
அதனை தொடர்ந்து உழவர் சந்தை புதுப்பிக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று காலை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, வேளாண் துணை இயக்குனர்(வேளாண வணிகம்) பூங்கோதை, இணை இயக்குனர் கண்ணையா, விற்பனைக்குழு செயலாளர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை துணை இயக்குனர் அருண்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி உழவர் சந்தையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து உழவர் சந்தையில் நேரடியாக விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்ய உள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.
இதில் வேளாண்மை அலுவலர் மகாதேவன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, சங்கீதா செந்தில் முருகன், கவுன்சிலர்கள் செந்தில்குமாரி இளந்திரையன், விஜயலட்சுமி செந்தில், பார்வதி, சுதா அரங்கநாதன், ஆராமுது, மாவட்ட பிரதிநிதி துர்கா செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை நேர சந்தை
உழவர் சந்தையில் கழிவு பொருட்களை கொண்டு உரம் தயாரிக்கும் எந்திரம், காய்கறிகள் மற்றும் பழங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் குளிர்பதன கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தையை தேர்ந்தெடுத்து, அந்த உழவர் சந்தையில் மாலை நேர உழவர் சந்தை செயல்படும் என தமிழக அரசு அறிவித்ததன் அடிப்படையில் கடலூரில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தையில் மாலை நேர சந்தையும் தொடங்கப்பட்டது. அதாவது அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரை விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வார்கள். அதன் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மாலை நேர உழவர் சந்தை செயல்படும். எனவே பொதுமக்கள், மாலை நேர உழவர் சந்தைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி பயன்பெறலாம்.