< Back
மாநில செய்திகள்
அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலி அகற்றம்
தர்மபுரி
மாநில செய்திகள்

அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலி அகற்றம்

தினத்தந்தி
|
6 July 2023 12:30 AM IST

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், வெளிமாநில பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதுடன், சாம்பல் பூசணியில் விளக்கேற்றி கோவிலை சுற்றி கிரிவலம் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவிலில் மூலவர் முன்பகுதியில் தீபம் ஏற்றும் கிரிவலப்பாதையின் குறுக்கே கடந்த 3-ந் தேதி தங்களது பட்டா நிலம் எனக்கூறி சிலர் இரும்புவேலி அமைத்தனர். இதனால் கிரிவலப்பாதையில் பக்தர்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் இரும்பு வேலியை அகற்றக்கோரி போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு பலனாக நேற்று காலபைரவர் கோவிலில் நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் முன்னிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் பட்டா நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட இடத்தின் நில உரிமையாளருக்கு, உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று உரிய வாடகை தொகை தர கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்ட இரும்பு வேலி தாசில்தார் முன்னிலையில் அகற்றப்பட்டது.

இதையொட்டி 3 நாட்கள் தடைப்பட்ட கிரிவலப்பாதையில் நேற்று பக்தர்கள் கோவிலை சுற்றி வந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

====

மேலும் செய்திகள்