புதுக்கோட்டை
ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்
|மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரத்து வாரிகளை தூர்வார வேண்டும்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். வேளாண்மைதுறை இணை இயக்குனர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
விவசாயி குழந்தைராஜ்:- புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வரத்து வாரிகளை தூர்வார தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வார படாததால் வேளாண்மைக்கு தேவையான தண்ணீர் ஏரி, குளங்களுக்கு வருவதில்லை. கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ்:- மேட்டூர் அணை நீர் கடைமடை பகுதிக்கு கொண்டு வரவேண்டும். விவசாய பணிக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. கூட்டுறவு சங்கங்களில் விவசாய பணிக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மூலிகை பயிர் உற்பத்தியாளர் சங்க தங்கராஜ்:- தேங்காய் உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை. கள், பதனி இறக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட விவசாயிகள் சங்க தலைவர் மிசா மாரிமுத்து:- விவசாயத்தை பாதிக்கின்ற தைல மரங்களை அகற்ற வேண்டும். மாவட்ட பகுதி மற்றும் கவிநாட்டு குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏரி குளங்களை தூர்வார வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னுசாமி:- சிறுதானிய உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி எப்படி வியாபாரம் செய்வது என்று விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மானியத்துடன் எந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவுன்ராஜ்:- தள்ளுபடி கடன் தொகையை மீண்டும் கட்ட சொல்கின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை விவசாயி செல்லத்துரை:- ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து தாலுகா அளவில் விளக்கி கூற வேண்டும். வேளாண் பொறியியல் துறையில் டிராக்டர்கள் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. மாவட்டத்தில் மும்முனை மின்சாரம் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு போதிய நிதி வருவதில்லை. காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பெருத்த பாதிப்பு ஏற்படுகிறது. வறட்சி பகுதிகள் என கிராம நிர்வாக அலுவலர் பதிவு செய்த பிறகும் காப்பீடு தொகை கிடைக்கவில்லை.
நூறு நாள் வேலை
இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி:- நூறு நாள் வேலை ஆட்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த திருச்சி மாவட்ட கலெக்டரின் முடிவை பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்திலும் விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வனத் தோட்டக்கழகத்தின் மூலம், தைலமரக்காட்டில் இடை உழவு செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும். முள்ளூர் கிராமத்திலுள்ள பசுக்குளத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவுகள் வந்து கலப்பதால் குளத்துநீர் மாசுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் பசுக்குளம் பாசன விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பேசுகையில், விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 4,598 மெ.டன்னும், டி.ஏ.பி. 1,596 மெ.டன்னும், பொட்டாஷ் 1,476 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 5,667 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மட்டும் 878 மெ.டன் யூரியா, 633 மெ.டன் டி.ஏ.பி., 470 மெ.டன் பொட்டாஷ், 866 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் உழவன் செயலியினை பயன்படுத்தி மானியத் திட்டங்களில் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.