< Back
மாநில செய்திகள்
தள்ளுவண்டி, நடைபாதை கடைகள் அகற்றம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தள்ளுவண்டி, நடைபாதை கடைகள் அகற்றம்

தினத்தந்தி
|
20 Dec 2022 12:15 AM IST

கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் தள்ளுவண்டி, நடைபாதை கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.


கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் தள்ளுவண்டி, நடைபாதை கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

நடைபாதை, தள்ளுவண்டி கடைகள்

கோவை மாநகர மக்களின் முக்கிய பொழுது போக்கு தளமாக வ.உ.சி. பூங்கா பகுதி திகழ்ந்து வருகிறது. இங்கு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்த பகுதியில் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு மாநகராட்சி சார்பில் ரூ.300 முதல் ரூ.600 வரை வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் நடைபாதை ஆக்கிரமித்தும், தள்ளுவண்டியில் கடைகள் நடத்துவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மேலும் இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

அகற்றம்

இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி அனுமதி பெறாத கடைகளை உடனடியாக அகற்றக்கோரி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தினர். ஆனாலும் அவர்கள் கடைகளை அகற்றவில்லை.

இதனைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில், உதவி நகர் அமைப்பு அலுவலர் பாபு, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி வருவாய் அலுவலர் கார்த்திகேயன் உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ் உதவி பொறியாளர் விமல் ராஜ் ஆகியோர் போலீசார் உதவியுடன் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றினர்.

இதற்கிடையில் கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அங்கு திரண்டனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்