விழுப்புரம்
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
|மேல்மலையனூர் அருகே குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதில் 10 வீடுகளை கடந்த மே மாதம் அதிகாரிகள் இடித்து அகற்றினர். மீதமுள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயன்றனர். அப்போது பொதுமக்கள் வீடுகளை அகற்றிக்கொள்ள தங்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என கூறினர். அதன்படி கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கால அவகாசம் முடிவடைந்ததையடுத்து நேற்று தாசில்தார் கோவர்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சிலம்புச்செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளும்படி வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் முருகன் தலைமையில் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து பொருட்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து மீதமிருந்த வீடுகள் மற்றும் கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.